போனில் பேசிய அமித்ஷா - போராட்ட களத்தை விட்டு இன்று வெளியேறிய விவசாயிகள் !

கடந்த ஒரு ஆண்டு காலமாக டெல்லியில் போராடிய விவசாயிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷா'வின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று வீடு திரும்பினர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் ஹாஜிபூர் எல்லைகளை முற்றுகையிட்டு ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நாட்டின் பாதுகாப்பு கருதி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்திலும் ரத்து செய்வது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். பிரதமர் மோடி சொன்னது போலவே கடந்த 29-ந்தேதி பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் விடாது ஆதார விலை (எம்.எஸ்.பி.) குறித்து உறுதியளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் எனவும் போராட்டக்களத்தில் இருந்த விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் சங்கங்களுடன் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் பெற்றதை அடுத்து, போராட்டத்தை விவசாய சங்கங்கள் கைவிட்டன. ஏற்கனவே அறிவித்தபடி டெல்லி எல்லைப்பகுதியில் இருந்து இன்று அவர்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.