ரூ.4,200 கோடியை நிவாரணமாக கொடுத்து ரூ.5,000 கோடியை மக்களிடம் இருந்து பறிக்கலாமா.. அன்புமணி ராமதாஸ்.!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்ததற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்ததற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று முதல் (ஜூன் 14ம் தேதி) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் தொற்று அதிகளவு பரவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள்தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு.
கொரோனா நிதியுதவியாக ரூ.4,200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5,000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்? இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.