தகவல் தெரியாமல் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு பாடம் எடுத்த அண்ணாமலை !
By : Mohan Raj
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி பற்றி பாடம் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 வாரமாக பருவமழை பெய்து அதன் சேதத்தால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகள் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன, அதிலும் குறிப்பாக சென்னையில் 500 இடங்களுக்கும் மேல் தண்ணீர் தேங்கி மக்கள் ஒதுங்க கூட இடமின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கம்போல் மத்திய அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, "ஆண்டுதோறும் தமிழகத்துக்கு மத்திய அரசானது பேரிடர் நிவாரண நிதியாக 1350 கோடி ரூபாய் அளிக்கும். 2020 – 2021ம் ஆண்டுக்கான நிதியில் இன்னமும் 300 கோடி ரூபாய் பாக்கி உள்ளது" என்று கூறி இருந்தார்.
இது தொடர்பான கருத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிலடி தரும் விதமாக கூறியதாவது, "தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி. 2020-21 ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி-1,360 கோடி. இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை ஜூலை 31 ஆம் தேதி அளித்துவிட்டது. நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம் முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் அதற்கு ஆதரமாக அண்ணாமலை இணைத்துள்ள ஆவணத்தை உற்று நோக்கினால் தமிழக அரசு நிதியை விடுவிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இப்படி 300 கோடி நிவாரண நிதியை மத்திய அரசை குறை கூறும் தி.மு.க அரசு விடுவிக்காமல் இருப்பதை அண்ணாமலை மக்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளார். இதனால் குறை எழுப்பிய தி.மு.க'வினர் செய்வதறியாது நிற்கின்றனர்.