தி.மு.க'வின் 4 மாத கால சாதனை என்னான்னா ஸ்டாலின் 2.5 லட்ச ரூபாய் சைக்கிள்'ல்ல போனதுதான் - அண்ணாமலை !
By : Mohan Raj
"4 மாத கால தி.மு.க ஆட்சியின் சாதனை என்னவென்றால், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின் போனதுதான்" என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள முருக்கேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "தி.மு.க'வை பொறுத்தவரை புது மாப்பிள்ளையாக 5வது மாதத்தில் இருக்கிறார்கள். அந்த ஐந்து மாதத்திற்குள்ளாகவே தேர்தல் வந்துள்ளது. ஆளும் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று மக்கள் சிலர் நினைக்கின்றனர். அந்த மாதிரியான தேர்தல் இது கிடையாது. உள்ளாட்சிகளுக்கு வரும் 80% நலத்திட்டங்கள் பாரத பிரதமர் மூலம் தான் வருகிறது. 1980-90களில் மாநில அரசு நிதி கொடுத்து உள்ளாட்சி பணிகள் நடைபெறும். 2021 மோடியின் காலம். அனைத்து அரசு திட்டங்களும் கிராம பஞ்சாயத்து மூலம் மக்களை சென்று கொண்டுள்ளது. 20% நிதி மட்டும்தான் மாநில அரசு தருகிறது
வீட்டின் வாசலிலேயே மக்கள் தண்ணீர் பிடிக்கும்படி 'ஜல் ஜீவன் திட்டம்' கொண்டு வந்தது மோடிதான். திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால்... மத்திய அரசின் இந்த குடிநீர் திட்டத்திற்கு நீங்கள் 10,000 கொடுத்து டோக்கன் வாங்கினால் தான் குடிநீர் குழாய் இணைப்பு வரும். கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஒரு இணைப்புக்கு ரூ.500, ரூ.1000, ரூ.10,000 என வசூல் வேட்டை நடப்பதை பார்க்கிறோம். மத்தியில் மோடி ஆட்சி இருக்கும்போது, மாநிலத்தில் தாமரை இருந்தால், மத்திய திட்டங்கள் நேரடியாக உள்ளாட்சி மூலம் லஞ்சம், லாவண்யம் இன்றி மக்களை வந்து சேரும்.
4 மாத கால தி.மு.க ஆட்சியின் சாதனை என்னவென்றால், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின் போனதுதான். அது நீங்களும் நாங்களும் போகும் சாதாரண சைக்கிள் இல்லை. அதன் விலை 2.5 லட்சம். ஒரு கிலோ மீட்டர் வரை சைக்கிளில் போகிற அவருக்கு. 2000 போலீஸ் செக்யூரிட்டி. சைக்கிளுக்கு முன்னாடியும், பின்னாடியும் 40 கார். இப்படி சைக்கிளில் போனால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நம்மளை ஏமாற்ற முதல்வர் முயற்சி செய்து கொண்டுள்ளார்" என தி.மு.க'வின் பித்தலாட்டங்களை மக்கள் முன் எடுத்துரைத்தார் அண்ணாமலை.