அண்ணாமலை அடித்த அடியில் ஆவினுக்கு போன டெண்டர் - விழிபிதுங்கும் தி.மு.க அமைச்சரவை !
By : Mohan Raj
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அடித்த அடியில் தீபாவளி பண்டிகைக்காக தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இனிப்புகள் வாங்க ஆவினுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இனிப்பு, காரம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெண்டர் விட்டு இனிப்பு, காரத்தை வாங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. ஆவினில் இனிப்பை வாங்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை வழங்கியபோதும், அதை ஏற்காமல் வெளிச்சந்தையில் இனிப்பு வாங்கவும் அதன்மூலம் 30 சதவீதம் கமிஷன் பெறவும் இத்துறையின் அமைச்சர் தரப்பு ஆர்வம் காட்டியதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், "இனிப்பு வாங்க டெண்டரில் போட்டியைக் குறைக்கும் வகையில் டெண்டர் விதிமுறையில் 100 கோடி ரூபாய் விற்று முதல் செய்யும் நிறுவனங்களுக்கே டெண்டர் விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 100 கோடி ரூபாய் விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களிடம் டெண்டர் எடுக்க காரணம் என்ன?" என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்பை ஆவினில் வாங்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே போக்குவரத்து துறை சார்பில் 1.36 லட்சம் அரை கிலோ இனிப்புகளுக்கான ஆர்டர் ஆவினுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் அரசியல் கருத்தால் ஒரு பெரும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.