ஆதீனம் மீது கை வைத்தால் பிரதமர் மோடி என்ன செய்வார் எனத் தெரியும் - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சவால்!
By : Thangavelu
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கு பயனாளிகளை கண்டறிவதாக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருவதாக விமர்சனம் செய்த அண்ணாமலை, ஆதீனத்தை தொட்டுப்பாருங்கள் என பிரதமர் மோடி என்ன செய்வார் என்று தெரியும் என அமைச்சர் சேகர்பாபுவுக்கு சவால் விடுத்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
மிரட்டும் மழையிலும், விரட்டும் காற்றிலும், அசையாத ஆர்வத்துடன், அளவு குறையாது கூடிய அன்பர்கள் கூட்டம் நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் மேல் மதுரை மக்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. (3/4) pic.twitter.com/dgJzuOYmRw
— K.Annamalai (@annamalai_k) June 15, 2022
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் காவல் நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக சென்ற பின்னர்தால் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போலீசாரின் கைகளை கட்டிப்போட்டு தி.மு.க.வினர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். தற்போது பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நூதனமான ஊழலை தொடங்கியுள்ளார். மதுரையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியை ஒரே நாளில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றி மீண்டும் மதுரைக்கே மாற்றியுள்ளார்.
மேலும் தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் நிலத்தை போலியாக பதிவு செய்தது கூட தெரியாமல் மதுரையில் ஜல்லி, மணல் எங்கு உள்ளது என தேடிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தி.மு.க. அமைச்சர் சேகர் பாபு மதுரை ஆதீனத்தை பற்றி தவறாக பேச ஆரம்பித்த அன்றே கதை காலி. பழைய சேகர் பாபுவை பார்ப்பீர்கள் எனவும் மிரட்டியுள்ளார். கோயில் உண்டியல் மீது மட்டுமே தி.மு.க.வினருக்கு கண் என ஆதீனம் கூறியிருப்பதில் என்ன தவறு? ஆதீனத்தை மட்டும் தொட்டுப் பாருங்கள் மதுரை மக்களும், பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆதீனத்துக்கும் பா.ஜ.க.விற்கு சம்பந்தம் இல்லை. ஆதீனம் மக்கள் பக்கம் உள்ளதால் அவரின் பக்கம் பா.ஜ.க. நிற்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Source: News 18 Tamilnadu