எஸ்.ஜி.சூர்யாவுக்காக பிரதமரிடம் அண்ணாமலை பேசியது என்ன?
By : Thangavelu
தமிழக பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவைப் பெரிய தலைவராக்குவோம் என்று பிரதமர் மோடியிடம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (மே 26) நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுரை ஆதினம், பா.ஜ.க. நிர்வாகிகள் பலரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் விமான நிலையம் வந்தடைந்த அண்ணாமலை கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கட்சியின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவை அறிமுகம் செய்தபோது, நாம் சூர்யாவை வருங்காலத்தில் தலை சிறந்த தலைவராக உருவாக்குவோம் என்றார்.
இது தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "என் வாழ்வின் மிகப்பெரும் உன்னத தருணம் நிகழ்ந்த தினம். சென்னை சிறப்பு விமான நிலையத்தில் நான் பிரமித்துப் போற்றும் ஆளுமையான பாரத பிரதமர் மோடியை வழியனுப்பச் சென்ற போது என் அருகில் சில கணம் நின்றார். ஒரு சிறிய கலந்துரையாடலை அவரோடு நிகழ்த்தினேன். பா.ஜ.க தமிழக தலைவர் .அண்ணாமலை இடைமறித்து என்னை விரல் காட்டி பிரதமருக்கு ஒரு வாக்களித்தார்.''நாம் சூர்யாவை வருங்காலத்தில் தலை சிறந்த தலைவராக ஆக்குவோம்'' என்றார். விரல் காட்டிய அக்கணத்தைக் கச்சிதமாகப் புகைப்படம் எடுத்தவருக்கும் கோடான கோடி நன்றி. இது வார்த்தைகளல்ல, என் வாழ்வின் அர்த்தம். மனம் நெகிழும், உயிர் மலரும் இத்தருணத்தை எனக்குச் சாத்தியமாக்கிய அண்ணாமலை அண்ணனுக்கும், கடவுளுக்கும் நன்றி" எனக்குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twitter