"பிரதமரிடம் மன்னிப்பு கேளுங்கள்"- உதயநிதி ஸ்டாலினுக்கு ட்வீட் செய்த அருண் ஜெட்லியின் மகள்!
By : Saffron Mom
பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், பல சீனியர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தான் உதயநிதி ஸ்டாலின் இந்த பதவிக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த உண்மையான குற்றச்சாட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு அதிகப்படியான எரிச்சலையும் கோபத்தையும் உள்ளாகி இருப்பது தெளிவாக தெரிகிறது.
கட்சியின் உள்ளேயே அவர் மேல் இருக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் முணுமுணுப்புகளை பிரதமர் மோடி வெளிப்படையாக உடைத்து விட்டாரா என்ற கேள்விகள் பல எழுந்தன. பிரதமர் மோடியும் பல சீனியர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தான் பதவிக்கு வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். இது சரியான ஒப்பீடு அல்ல என்று பலரும் அதற்கு பிறகு கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தந்தையும், தாத்தாவும் பா.ஜ.க கட்சி தலைவர்கள் அல்ல.
இத்தகைய 'பதிலடி' போதாதென்று, தற்பொழுது மறைந்த பா.ஜ.க தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லியின் இயற்கையான மரணங்கள் குறித்தும் அதற்கு பிரதமர் மோடி தான் ஒருவகையில் காரணம் என்ற தொனியில் அவர் பேசியது, தேசிய அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியது.
ஒரு தெருமுனைப் பிரச்சாரத்தில் இறந்துபோன தலைவர்களின் மரணத்தைக் குறித்து கொச்சைப்படுத்த வேண்டிய காரணம் என்ன? சமூக வலைத்தளங்கள், கேமராக்கள், வீடியோக்கள் அனைத்தையும் தாண்டி இந்த மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க தி.மு.கவினர் முயல்வது போல் தெரியவில்லை. சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லியின் மகள்கள் ட்விட்டரில் தங்களுடைய வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சோனாலி ஜெட்லி கூறுகையில், "உங்களுக்கு தேர்தல் நேர அழுத்தங்கள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய தந்தையின் நினைவை குறித்து, நீங்கள் பொய் கூறி அவமரியாதை செலுத்தும்போது நான் அமைதியாக இருக்க மாட்டேன். அப்பா அருண் ஜெட்லியும், திரு. நரேந்திர மோடி அவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த பிணைப்பைக் கொண்டுள்ளனர். அத்தகைய நட்பை உணரும் அளவிற்கு நீங்கள் அதிர்ஷ்டம் பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
பிறகு சுஷ்மா சுவராஜ்சின் மகளான பன்சூரி ஸ்வராஜ், "என்னுடைய அம்மாவின் நினைவை உங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய கூற்றுகள் தவறானவை. பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய அம்மாவின் மீது பெரும் மரியாதையையும் கௌரவத்தையும் செலுத்தினார். எங்களுடைய இருண்ட நேரங்களில், பிரதமரும் பா.ஜ.கவும் எங்கள் பின்னால் வலுவாக நின்றனர். உங்களுடைய கூற்றுக்கள் எங்களை காயப்படுத்தி விட்டன. "என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கும் கூட டேக் போட்டு தங்களுடைய வருத்தங்களை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கிறேன் என்று கிளம்பிய உதயநிதி ஸ்டாலின், தான் சீனியர்களை ஒதுக்கி வைத்து முன்னுக்கு வந்ததாக பிரதமர் மோடி கூறியதற்கு பதிலாகவே தன் கருத்துகளை கூறியதாகவும், வேறு நோக்கம் எதுவுமில்லை என்றும் கூறினார். மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக உண்மைகளை சரியாக 'புரிந்து கொள்ளும் படி' சம்பந்தமே இல்லாமல் பேசினார்.
இதற்கு பதிலளித்த அருண் ஜெட்லியின் மகள், "தன் தந்தையின் மரணத்திற்கு காரணம் நரேந்திர மோடி என்று நீங்கள் கூறினீர்கள். அதை நியாயப்படுத்தாமல் பிரதமரிடம் மன்னிப்பு கோருங்கள். உங்களுக்கு இது அரசியல். எங்களுக்கு இது பர்சனல்" என்று கூறிய ட்வீட் வைரலானது.
திமுக எம்.பியும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரைப் பற்றி மிகுந்த அவதூறாகவும், ஆபாசமாகவும் இரண்டு, மூன்று முறை பேசியது நாடு முழுவதும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி தேர்தல் ஆணையம் அவரை 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தும், நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. அவரை நிறுத்திவைத்து சில மணிநேரங்களிலேயே தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர், தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டார்.
உதயநிதியின் பேச்சு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து பலருடைய கண்டனங்களையும் பெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் எவ்வளவுதான் கீழ்த்தரமாக பேசுவார்கள் என்ற ஆயாசத்தையும் மக்களுக்கு இது அளித்துள்ளது. தலைவர்களின் இயற்கையான மரணத்தை கொச்சைப்படுத்தும் இத்தகைய கூற்றுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியலில், எதிர்க்கட்சிகளை எதிரிகளாகவே பாவித்து தரம் தாழ்ந்து சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வதும், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி விடுவதும் பல காலமாகவே தொடர்ந்து வரும் செயலாகும்.
இது நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், அநாகரீகமான, ஆபாசமான பேச்சுகளும், கேட்பவரை முகம் சுளிக்க வைக்கும் விமர்சனங்களும் இங்கே கொடி கட்டிப் பறக்கின்றன. ஆனால் பெரும்பாலும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், பேச்சாளர்கள் தெருமுனைக் கூட்டங்களில் கைதட்டல்களை பெறுவதற்காக வைக்கப்படும் இத்தகைய பிரச்சாரங்கள் கடந்த சில காலமாக உயர்மட்ட தலைவர்களால் பொது மேடைகளில் பேசப்படுவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபையிலேயே இத்தகைய பேச்சுக்களும், நடத்தைகளும் திராவிட கட்சிகளால் தொடங்கி வைக்கப்பட்டாலும் தற்பொழுது சமூக வலைத்தளத்திலும் வீடியோக்களில் தெளிவாக அவை பதிவு செய்யப்பட்டு எல்லாருக்கும் நேரடியாகவே சேர்ந்துவிடுகிறது. அதுவும் தேர்தல் காலங்களில் இவை அதிகப்படியாகவே நடக்கிறது.