இனி நீலகிரியில் தவறு நடந்தால் பா.ஜ.க சும்மா இருக்காது - அண்ணாமலை சவால் !
By : Mohan Raj
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யாவை மாற்றிவிட்டால் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களையும், ரிசார்ட்களையும் காப்பாற்றி விடலாம் என்று தொழிலதிபர்களும், ரிசார்ட் உரிமையாளர்களும், அவர்களால் பலன் அடையும் ஆளும்கட்சி தி.மு.க'வும் நினைக்கின்றனர் என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, "ஹார்ட் ஆப் தி எலிபென்ட் காரிடார்' என்று சொல்லப்படும், முதுமலைப்பகுதியில் இருக்கும் யானைகள் வழித்தடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதிகளவில் காட்டேஜ்கள், ரிசார்ட்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால், யானைகளின் வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளன.இதை உயிரின பாதுகாவலர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். யானைகள் வழித்தடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ல் வழக்கு தொடர்ந்தார்.
நீலகிரியின் முதுமலையை சுற்றிலும் உள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், பொக்காபுரம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும், 7,000 ஏக்கர் பரப்பளவில், 821 காட்டேஜ்கள் யானைகள் வழித்தடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, காட்டேஜ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
தற்போது, இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானைகள் வழித்தட மீட்பு குழுவில் முக்கியமானவரான இருக்கும் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை, அந்த பணிகள் முடியும் வரை அங்கிருந்து மாற்றக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தி.மு.க.,வின் மேல் மட்டத்தில் இருக்கும் பலரையும் பிடித்து, திவ்யாவை அங்கிருந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரிசார்ட் உரிமையாளர்களும், தொழில் அதிபர்களும், அரசியல்வாதிகளும் முயற்சித்துள்ளனர். பலர், திவ்யாவை மிரட்டி உள்ளனர். 'வீட்டில் இருப்போரை கடத்துவோம்' என்றுகூட கூறியுள்ளனர். இதனால், தன் உடல் நிலையை காரணம் காட்டி, திவ்யா நீண்ட விடுப்பில் சென்றார். நவ., 5ல் பணிக்கு திரும்ப முயற்சித்த போது, அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து, அவசர அவசரமாக இன்னசென்ட் திவ்யாவை அங்கிருந்து மாற்றி விட்டு, அம்ரித் என்பரை நீலகிரி மாவட்ட கலெக்டராக அறிவித்து, அவரும் உடனடியாக பதவி ஏற்று விட்டார். இன்னசென்ட் திவ்யாவை அங்கிருந்து மாற்றி விட்டால், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களையும், ரிசார்ட்களையும் காப்பாற்றி விடலாம் என்று தொழிலதிபர்களும், ரிசார்ட் உரிமையாளர்களும், அவர்களால் பலன் அடையும் ஆளும்கட்சியினரும் நினைக்கின்றனர்.
இந்த விஷயத்தை, தமிழக பா.ஜ.க பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இந்த விவகாரத்தில், இனி பா.ஜ.க தனி கவனம் செலுத்தும். எங்கும் தவறு நடக்காதபடி பார்த்து கொள்ளும். புதிய கலெக்டர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதும் கண்காணிக்கப்படும். தவறு நடந்தால், உடனே தட்டிக் கேட்போம்" என கூறியுள்ளார்.