தைரியம் இருந்தால் அடியாட்களை, ரவுடிகளை வைத்து கரூரில் தடுக்கட்டும்: அமைச்சருக்கு சவால் விடுத்த அண்ணாமலை!
By : Thangavelu
பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்காவிட்டால் தி.மு.க. அரசுக்கு எதிராக கோட்டை முற்றுகையிடப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்து உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்திலும் மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அப்படி குறைக்காத பட்சத்தில் 72 மணி நேரத்திற்கு பின்னர் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இதனையடுத்து கடலூரில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தி.மு.க. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அவ்வளவு தைரியமா? பாத்துடலாமா? இது தி.மு.க. அரசு உங்களது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். மேலும், அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை தாண்ட முடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக உள்ளனர் என்பதற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்ல ஒரு உதாரணம். ஒரு அமைச்சர் போன்று பேசுகிறாரா? கரூரை தாண்ட விட மாட்டோம் என்று கூறுகிறாரா! என கேள்வி எழுப்பினார். அப்படி அமைச்சருக்கு அடியாட்கள், ரவுடிகளோ நெஞ்சில் தைரியம் இருந்தால் கரூர் வந்து என்னை தடுக்கட்டும். அதன்பின்னர் என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும். இது பழைய பா.ஜ.க. நினைப்பில் அமைச்சர் பேசியிருந்தால் அதனை அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது தி.மு.க. அமைச்சரின் பேச்சுக்கு பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Asianetnews