சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டார். இந்த முடிவை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார்.
சசிகலா சிறை சென்று திரும்பிய நிலையில் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இவரது அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதே போன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சசிகலா தெரிவித்துள்ள காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக வளர்ச்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிராக விளங்கக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
சசிகலாவால் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே அவருடைய அறிவிப்பை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.