Kathir News
Begin typing your search above and press return to search.

"எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?" - தி.மு.க'வுக்கு எதிராக கொந்தளித்த ஜாக்டோ ஜியோ !

Breaking News.

எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? - தி.மு.கவுக்கு எதிராக கொந்தளித்த ஜாக்டோ ஜியோ !

Mohan RajBy : Mohan Raj

  |  27 Aug 2021 3:45 PM GMT

ஆசிரியர்கள் மீது அப்படி என்ன நிதியமைச்சருக்கு வன்மம் என ஆசிரியர் சமுதாயம் நிதியமைச்சர் பி.டி.ஆருக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு அறிவித்த 11 விழுக்காடு அகவிலைப் படியினை நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசின் தொற்று நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, தமிழக மக்களை கரோனா கோரப் பிடியில் இருந்து காக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இறந்த நிலையிலும், தங்களின் உயிரினைத் துச்சமென மதித்து, களப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 1-4-2022 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது.

நிதியமைச்சர் நேற்றைய தினம் (23-08-2021) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் அந்நியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும், நிதிநிலை அறிக்கையில், ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு,தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின்பால் பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளிவிவரத்தினைப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2002ஆம் ஆண்டு, தமிழகத்தின் வருவாயில் 94 விழுக்காடு ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை ரத்து செய்து, ஓய்வூதியப் பணப்பலன்களை ரொக்கமாக வழங்காமல் பணப் பத்திரமாகத் தந்தார். அன்றைய தினம், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி 94 விழுக்காடு ஊதியம்-ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்பதனைப் புள்ளிவிவரத்தோடு மறுத்தது மட்டுமல்லாது, ஆளுகின்ற அரசு தனது கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் ஊதியம்- ஓய்வூதியத்தினை சுமையாகக் கருதக்கூடாது, அரசின் திட்டச் செலவினமாகவேக் கருத வேண்டும் என்று தெரிவித்தார்.

உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து, ஜாக்டோ - ஜியோ கிளர்ந்தெழுந்து டெஸ்டா எஸ்மா சட்டங்களை எதிர்கொண்டு போராடியபோது 1,74,000 பேர் ஒரே ஆணையில் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் சிறைவைக்கப்பட்டனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் எஸ்மா- டெஸ்மா வழக்குப் போடப்பட்டது என்பது வரலாறு.

2006ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், முந்தைய ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட அனைத்துச் சலுகைகளையும், உரிமைகளையும் திரும்ப வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல், 2008ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தபோது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்ததைத் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டவுடன், உடனடியாக அதிகாரிகளை அழைத்து, தமிழக அரசு ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கான உத்தரவினை மருத்துவமனையில் இருந்துகொண்டே கருணாநிதி பிறப்பித்தார் என்ற வரலாற்றினை நிதியமைச்சருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், ஜாக்டோ - ஜியோ போராட்டக் களத்திற்கு வந்து உறுதியளித்ததற்கு வலு சேர்க்கும் விதமாக, திமுக தேர்தல் அறிக்கையில் "திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றது. இந்த வாக்குறுதியானது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றால், ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றால்தான் சாத்தியமாகும் என்பதை அன்றைக்கே உணர்ந்து, கடுமையான களப்பணியாற்றினோம்.

கடந்த மே 7ஆம் தேதி, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்திலிருந்தே, தேர்தலின்போது தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியதைக் கண்டதும், நமது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டது.

ஆனால், நிதியமைச்சர் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளார். இப்போக்கானது, அரசிற்கும் ஆசிரியர்- அரசு ஊழியரிடையே, காலங்காலமாக இருந்த நல்லுறவினை பேணிப் பாதுகாத்துவரும் திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு கருதுகிறது. எனினும் தமிழக முதல்வர் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பிற்கு முழுமையான நம்பிக்கை உள்ளது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Source - The hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News