"மணப்பாறையில் கல்லூரி வருதுன்னு சொன்னீங்களே என்னாச்சு?" - ஸ்டாலினுக்கு வைகோ கேள்வி !
Breaking News.
By : Mohan Raj
'தேர்தல் வாக்குறுதிபடி மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்' என முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு, "மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர்; ஆற்று நீர், ஊற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்தி, குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று, கடந்த 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா முடக்கத்தின்போது, வீட்டு வாசல்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள் கோரிக்கை அட்டையைக் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்; மணப்பாறைக்குக் கல்லூரி வேண்டும் என வேண்டுகோள் விடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.
மணப்பாறை மக்களின் பல ஆண்டுக் கோரிக்கையை உணர்ந்து, அரசு கல்லூரி அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது. மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.