Kathir News
Begin typing your search above and press return to search.

குவாரி தொழிலுக்கு லஞ்சமாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.500 கோடி கொடுக்கப்பட்டதா ?

Breaking News.

குவாரி தொழிலுக்கு லஞ்சமாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.500 கோடி கொடுக்கப்பட்டதா ?
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Sept 2021 6:45 PM IST

"எங்களால் குவாரி தொழிலே நடத்த முடியவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு ஐந்நூறு கோடி ரூபாயும், கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முந்நூறு கோடி முன்பணம் குடுத்துள்ளோம்" என புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரனின் ஆட்கள் மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்.

இது தொடர்பாக எஸ்.ஆர் என அழைக்கப்படும் எஸ்.ராமசந்திரன் மீது குவாரி ஒப்பந்ததாரர்கள் கடும் கோபத்தில் புகார் எழுப்பியிருக்கிறார்கள். அதில், "எங்களால் குவாரி தொழிலே நடத்த முடியவில்லை. 'முதலமைச்சருக்கு ஐந்நூறு கோடி ரூபாயும், கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முந்நூறு கோடி ரூபாயும் முன்பணமாகக் கொடுத்திருக்கிறோம். அதுபோக, ஒவ்வொரு மாதமும் முந்நூறு கோடி ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கிறது. அதனால், ஒவ்வொரு குவாரிக்கும் நடைச்சீட்டு ஒன்றுக்கு முந்நூறு ரூபாய் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கனிமவள உதவி இயக்குநரிடமிருந்து அனுப்புகைச் சீட்டு கிடைக்காது. எங்களை மீறி நீங்கள் குவாரி நடத்த முடியாது' என்று புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரனின் ஆட்கள் மிரட்டுகிறார்கள். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதே அந்த புகார்.

மேலும் இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் நாராயணப் பெருமாள்சாமி கூறுகையில், "விருதுநகர் உதவி இயக்குநர் செல்வகுமாரிடம் கிராவல் மண் அனுமதிக்காக எங்கள் சங்க உறுப்பினர்கள் அணுகியபோது, 'நீங்க கம்பெனி ஆட்களிடம் ஒப்புதல் வாங்கிட்டு வாங்க' என்றிருக்கிறார். அலுவலகத்தின் வாசலில் தங்களை கம்பெனி ஆட்களாக அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், 'முதல்வருக்கு 500 கோடி ரூபாயும், துரைமுருகனுக்கு 300 கோடி ரூபாயும் கொடுத்து இந்தத் தொழிலை எடுத்திருக்கிறோம். எங்கள் அனுமதி இல்லாமல் நீங்க தொழில் பண்ண முடியாது. ஒரு நடைச்சீட்டுக்கு 300 ரூபாய் தாங்க' என்று கேட்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரனின் ஆட்கள்தான், உதவி இயக்குநரின் அலுவலகத்தில் இருந்த கொண்டு இப்படிப் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்" எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, 40 ரிஜிஸ்டர் தபால்களில் முதலமைச்சர், அமைச்சர் துரைமுருகன், விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.


Source - ஜூனியர் விகடன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News