தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ச்சி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன்.. மத்திய அமைச்சர் எல்.முருகன்.!
தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்து ஒத்துழைப்பு அளித்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
By : Thangavelu
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ் பண்பாட்டுக்காக, கலாசாரத்துக்காக தமிழர்கள் முன்னேற்றத்துக்காக இந்த அமைச்சர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பொறுப்பு அல்ல, பணி. இந்த வாய்ப்பை வழங்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்து ஒத்துழைப்பு அளித்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகம் நல்ல வளர்ச்சி பெற்ற ஒரு மாநிலம் ஆகும். இன்னும் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.