எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்தானே தவிர, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அல்ல என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் கருத்து கூறிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என்று, பாஜக தரப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தது தேர்தல் பிரச்சாரத்திலும் அக்கட்சி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அத்துடன், பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், பாமக தலைவரின் அதிரடியான கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.