அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை எப்படியாவது உடைக்க ஒற்றை காலில் நிற்கும் ஸ்டாலின்!
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை எப்படியாவது உடைக்க ஒற்றை காலில் நிற்கும் ஸ்டாலின்!
![அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை எப்படியாவது உடைக்க ஒற்றை காலில் நிற்கும் ஸ்டாலின்! அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை எப்படியாவது உடைக்க ஒற்றை காலில் நிற்கும் ஸ்டாலின்!](https://kathir.news/static/c1e/client/83509/migrated/6b4e793560bc3c7ab595627f111b7b61.jpg)
தமிழக பா.ஜ.க வளர்ந்து வருவதை தமிழக பா.ஜ.க-வை சேர்ந்தவர்களை விட தி.மு.க தலைவர் ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அ.தி.மு.க-வை விட பா.ஜ.கவே தி.மு.கவிற்கு மிகுந்த தலை வலியாக இருக்கப்போகிறது என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்ததாலேயே பா.ஜ.க-வை எதிர்க்க அ.தி.மு.கவை துணைக்கு அழைப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதை உறுதிபடுத்தும் வகையில் ஸ்டாலினின் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது அதில், "அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்தக் கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது" என்று எழுத்துபூர்வமாக மத்திய பா.ஜ.க அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், "இந்த ஆண்டே இட ஒதுக்கீடு கொடுங்கள்" என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அ.தி.மு.க அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பா.ஜ.க அரசும் - அ.தி.மு.க அரசும் கைகோத்துக் கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது" என்று இட ஒதுக்கீட்டை மையமாக வைத்து ஸ்டாலின் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க'வை விமர்சித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், "எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல், சமூக நீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல், மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்வர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மத்தியில் ஆளும் பா.ஜ.க மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் எதிரணியில் வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடுவது என்பது இயலாத காரியம், மேலும் தி.மு.கவினரின் அதிருப்தி மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் ஆட்சியமைக்க கூடிய கணிசமான தொகுதிகளை பெறுவது மிகுந்த கடினமாகும் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். எனவே எப்படியாவது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வை தனித்தனியே பிரித்து தேர்தலை சந்திக்க வைத்தால் ஓரளவிற்கு தி.மு.க சங்கடங்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்பது ஸ்டாலினின் மனக்கணக்கு என சில மூத்த உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
ஆகையினால்தான் கடந்த முறை ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட அ.தி.மு.கவை ஸ்டாலின் அழைத்தார், இந்த முறையும் இட ஒதுக்கீட்டை காரணம் காண்பித்து பா.ஜ.க உடனான கூட்டணியில் இருந்து விலக சொல்லி அ.தி.மு.கவிற்கு அறிவுரை அறிக்கை விடுகிறார் ஸ்டாலின்.
இன்னும் 5 மாத காலத்தில் தேர்தலை சந்திக்கப்போகும் தமிழகத்தில் தி.மு.க இன்னும் என்னவெல்லாம் அரசியல் செய்ய காத்திருக்கிறதோ?