தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை.!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான காலங்கள் குறைவாக உள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். நேற்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான காலங்கள் குறைவாக உள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். நேற்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
இதனிடையே இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த மாவட்டத்தில் அதிமுக, பாமக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டையில் இருந்து பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, 11 மணியளவில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான ஜி.கே.மணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதனை முடித்துக்கொண்டு, மதியம் 1 மணிக்கு தருமபுரி நான்கு ரோட்டில் பாமக வேட்பாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
அதனை முடித்துக்கொண்டு, மாலை 4 மணிக்கு காரிமங்கலத்தில் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். அதனை முடித்துக்கொண்டு மாலை 5 மணிக்கு மொரப்பூரில், அதிமுக வேட்பாளர் வே.சம்பத்குமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
இதன் பின்னர் மாலை 6 மணிக்கு ஒடசல்பட்டி கூட்டு ரோட்டில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். இதனை முடித்துக்கொண்டு அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் இரவு தங்குகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.