ராகுல்காந்தி மீது நெல்லை பெண் துணை வட்டாட்சியர் பரபரப்பு புகார்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தொடங்கும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
By : Thangavelu
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தொடங்கும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் தேதி அறிவித்த அன்று மாலை முதல் அமலுக்கு வரும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு பாஜக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வருகை புரிகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளார்.
இதன்படி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, முத்தையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் ராகுல் பிரச்சாரம் செய்தார். இதன் பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நெல்லை நகர் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக துணை வட்டாட்சியர் விஜயா புகார் அளித்துள்ளார். அது மட்டுமின்றி நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கட்சியின் தலைவராக இருக்கும் ராகுலுக்கு சட்டம் பற்றி தெரியாமல் இருக்கிறாரா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் அனைவரும் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.