#Video காங்கிரஸ் தமிழக பொருளாளர் ரூபி மனோகரனை நாங்குநேரியில் ஓட ஓட விரட்டியடித்த காங்கிரஸ் தொண்டர்கள்!
#Video காங்கிரஸ் தமிழக பொருளாளர் ரூபி மனோகரனை நாங்குநேரியில் ஓட ஓட விரட்டியடித்த காங்கிரஸ் தொண்டர்கள்!
By : Kathir Webdesk
ரூபி மனோகரன் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை கொண்டிருப்பவர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளராக தேசிய தலைமையால் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் வசந்த குமார் நாங்குநேரி எம்.எல்.ஏ-வாக இருந்த போதே, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 2019 தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதைத்தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த நாங்குநேரி தொகுதிக்கு 2019 ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில் தி.மு.க போட்டியிட விருப்பப்பட்டது, இருப்பினும் டெல்லியில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வரவே, பம்மி காங்கிரஸையே போட்டியிட அனுமதித்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் ரூபி மனோகரன். அப்போதே, உள்ளூர்வாசிக்கு வாய்ப்பளிக்காமல், சென்னையில் வசிக்கும் ரூபி மனோகரனுக்கு சீட்டா என காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர். இடைத்தேர்தலிலும் ரூபி மனோகரன் அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனிடம் படுத்தோல்வி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து, மீண்டும் 2021 தேர்தலில் நாங்குநேரியில் போட்டியிட ஆசைப்படும் ரூபி மனோகரன், நேற்று நாங்குநேரி அருகே பரப்பாடியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரூபி மனோகரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் அங்கிருந்த கிரில் கம்பியில் மாலையைப் போட்டுவிட்டு தப்பித்து சென்றார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
காங்கிரஸாரின் உட்கட்சி மோதலில் நடந்த வாக்குவாதத்தால் அப்பகுதியில் நிறுத்தப்பட்ட காங்கிரஸாரின் வாகனங்களால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நாங்குநேரி திசையன்விளை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில பொருளாளராக பொறுப்பேற்றப் பிறகு, நாங்குநேரி தொகுதிக்கு முதன்முதலாக வந்த ரூபி மனோகரனுக்கு அவரது கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஓட ஓட விரட்டிய நிகழ்வு அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.