தலித் ஊராட்சிமன்ற தலைவருக்கு தொல்லை கொடுக்கும் கவுன்சிலர்கள் - பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீர் விடும் பெண்
By : Thangavelu
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் லஞ்சம் வாங்க கட்டாயப்படுத்தும் கவுன்சிலர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண் ஊராட்சிமன்ற தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. அங்கு ஊராட்சி மன்ற தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முருகேஸ்வரி உள்ளார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இருந்து ஊராட்சி செயலாளரும், வார்டு உறுப்பினர்களும் எவ்வித பணியும் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும், லஞ்சம் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாகவம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்களை நேரில் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தார். ஆனால் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் பணி செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாக முருகேஸ்வரி கண்ணீருடன் கூறியுள்ளார். தனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். தலித் சமூதாயத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத்தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே தமிழகத்தில் நிலவி வருகிறது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu