ஹைதராபாத்தில் பிரசாந்த் கிஷோரை சந்தித்தாரா விஜய்? - அரசியல் ஆலோசனையா?
நடிகர் விஜய், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உடன் ரகசிய சந்திப்பு நடத்தி உள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளன.

By : Mohan Raj
நடிகர் விஜய், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உடன் ரகசிய சந்திப்பு நடத்தி உள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் விஜய் அவர்களின் மன்ற நிர்வாகிகள் உடனான சந்திப்பு, மேலும் மன்ற நடவடிக்கைகள் ஆகிய செயல்கள் அரசியலை நோக்கி நகர்வது போல் இருந்து வந்த நிலையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான நடவடிக்கைகளில் விஜய் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார். இப்பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக திரைப்படங்கள் தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்பாட்டில் நடிகர் விஜய் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க'வுக்கு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது விஜயின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் விஜய் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ரகசியமாக நடந்த இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை இருப்பினும் விஜயின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு இருக்கலாம் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
