Kathir News
Begin typing your search above and press return to search.

'அடக்கி வாசிக்கணும் தம்பி'- உதயநிதிக்கு அறிவுரை கூறும் தி.மு.க காரர்.!

'அடக்கி வாசிக்கணும் தம்பி'- உதயநிதிக்கு அறிவுரை கூறும் தி.மு.க காரர்.!

அடக்கி வாசிக்கணும் தம்பி- உதயநிதிக்கு அறிவுரை கூறும் தி.மு.க காரர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2020 6:58 PM GMT

பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத தி.மு.க, மறுபடியும் ஜெயித்து ஆட்சிக்கு வரும் முன்னரே வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு அவ்வப்போது ட்ரெய்லர் காட்டுவது வழக்கம். 2006-11 இல் அவர்கள் காட்டிய முழு படத்தையும் பார்த்து தான் பத்து வருடங்களாக தி.மு.க ஆட்சி என்றாலே மக்கள் அலறியடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவர் ஆக்கி ஸ்டாலினுக்கு அடுத்தபடியான கட்சி 'வாரிசு' இவர்தான் என்று தம்பட்டம் அடிக்காத குறையாக அறிவித்து விட்டார்கள்.

கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாரும் கூட தங்களுடைய பிறந்த நாளில் உதயநிதியிடம் வாழ்த்து பெற அவரது இடங்களுக்குச் சென்று வந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், ஒரு இடத்தில் ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷின் பெயரைக் குறிப்பிட்டு, நாங்கள் ஆட்சிக்கு விரைவில் வந்து விடுவோம் நாங்கள் பார்க்காத காவல்துறையா என்றெல்லாம் மிரட்டல் தொனியில் பேசியது பலத்த கண்டனங்களை வரவைத்தது.

இதை குறித்து தினமலர் நாளிதழில், வாசகர் பக்கம் ஆன, 'இது உங்கள் இடத்தில்' ஈமெயில் அனுப்பியுள்ள திருப்பூரைச் சேர்ந்த கலையரசன் என்பவர், தானும் ஒரு தி.மு.ககாரன் என்றும் அரசியலில் தனக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உதயநிதியின் பேச்சுக்கு அவர் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

போலீசாரிடம் எந்தவிதமான வம்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறது என்று போலீஸ் அதிகாரிகள் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கருதுவதாக கூறினார்.

அரசியல்வாதிகளைப் போல தொடர்ந்து மாறக் கூடியவர்கள் அல்ல, காவல்துறையினர் தங்கள் பணி ஓய்வு பெறும் வரை பதவியில் இருப்பார்கள் என்றும் ஒரு போலீஸ்காரர் மற்றொரு போலீஸ்காரரை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார். உயர் போலீஸ் அதிகாரியை ஆட்சிக்கு வரும் முன்னரே கிள்ளுக்கீரையாக எண்ணி இப்படி மிரட்டும் தொனியில் பேசினால் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் தங்களையே இப்படி அவமானப்படுத்துவது போலத்தான் தோன்றும் என்றும் கூறியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் தந்தை ஸ்டாலின் அவசர காலத்தின்போது சிறையில் வாங்கிய உதையையும், உதயநிதி ஸ்டாலினின் தாத்தா கலைஞர் கருணாநிதியை காவல்துறையினர் கைது செய்தபோது ஐயையோ என்னை கொல்கிறார்களே என்று கூச்சலிட்ட நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்த அந்த தி.மு.ககாரர், போலிசாரிடம் தேவையில்லாமல் பகைமையை வளர்த்துக் கொண்டால் பின்னர் லாடம் கட்டி விடுவார்கள் என்று அறிவுரை கூறி எச்சரித்தார்.

நான்கு படங்களில் நடித்து விட்டதால் தன்னை ஹீரோவாகவே எண்ணிக்கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் பேசும் வசனங்களை போல நிஜ வாழ்க்கையிலும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினால் 'பென்டு' நிமித்தி விடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலில் குறைந்த கால அனுபவம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் வெகுவிரைவாக ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டார். இதனால் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் பேசுகிறாரா அல்லது அவர்களது பாணி இப்படித்தான் இருக்கப் போகிறதா என்று தெரியவில்லை. இது பொது மக்களை மட்டுமல்லாமல் தி.மு.கவினரை கூட முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்பதே உண்மை. ஆட்சிக்கு வரும்வரையாவது மக்கள் ஐஸ் வைக்க வேண்டாமா? இப்படி போலீஸ் அதிகாரியை மிரட்டும் தொனியில் பேசுவது மக்களுக்கு 2006-11ன் கொடூரங்களைத் தான் நினைவுபடுத்துகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News