சேதம் அடைந்த வீடுகளுக்கு 25,000 ரூபாய் தரும் புதுச்சேரி அரசு - தமிழகத்திலும் எதிர்பார்க்கலாமா?
By : Mohan Raj
புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு 25,000 ரூபாய் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெள்ளம் தேங்கிய பகுதிகளுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் என தி.மு.க அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் இரு மாநில அரசுகளும் மழை நீரை வடிய வைக்க போராடுகின்றனர். இதில் முன்னோடியாக பா.ஜ.க கூட்டணியில் ஆளும் புதுச்சேரி ரங்கசாமி தலைமையிலான அரசு மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000 எனவும், பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 எனவும், மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5000 எனவும் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நேற்றுமுதல் மழை குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பாடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் தரும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமுகாம்கள் நடத்திவருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மருத்துவமுகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மழைக்காலங்களில் மக்களுக்கு இயற்கையாக வருகிற நோய்களான காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு என பல்வேறு உபாதைகளிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழக முதல்வரின் அறிவுறுத்தல் படி மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குடிசை பகுதிகளில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு அரைகிலோ என்ற வகையில் ப்ளீச்சிங் பவுடர் தருகிற பணி இன்று துவங்கியுள்ளதாக" தெரிவித்தார்.
பக்கத்து பா.ஜ.க கூட்டணி ஆளும் புதுச்சேரியில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000, பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5000 நிவாரணம் என அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் நிவாரண அறிவிப்புகள் ஏதுமின்றி இருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.