குண்டு வெடிப்பு, தீவிரவாத கைதிகள் விடுதலை இல்லை - கொந்தளித்த இஸ்லாமியர்கள் !
By : Mohan Raj
குண்டு வெடிப்பு குற்ற வழக்கு கைதிகள் விடுதலை இல்லை என்ற தி.மு.க'வின் முடிவால் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
இந்நிலையில், கடந்த 15'ம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பது தங்கள் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய வாக்குகளை பெற தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டது என பல இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.