"இந்துக்களுக்காக போராடக்கூடிய இயக்கம் தி.மு.க" - கனிமொழியின் திடீர் இந்துக்கள் மீதான பாசம்!
"இந்துக்களுக்காக போராடக்கூடிய இயக்கம் தி.மு.க" - கனிமொழியின் திடீர் இந்துக்கள் மீதான பாசம்!
![இந்துக்களுக்காக போராடக்கூடிய இயக்கம் தி.மு.க - கனிமொழியின் திடீர் இந்துக்கள் மீதான பாசம்! இந்துக்களுக்காக போராடக்கூடிய இயக்கம் தி.மு.க - கனிமொழியின் திடீர் இந்துக்கள் மீதான பாசம்!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/985baf512eb581af03b61457876b7524.jpg)
வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்றால் அதற்கு காரணம் இந்துக்கள் வெறுப்பாகவே இருக்க முடியும் என்று தி.மு.க முடிவு செய்துவிட்டது. இதன் காரணமாகவே கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் "என்னுடைய துணைவியார் போகாத கோவிலே கிடையாது, நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல" என அந்தர் பல்டி அடித்தார்.
தற்பொழுது ஸ்டாலினை தொடர்ந்து அவரின் தங்கையும், தி.மு.க எம்.பி'யுமான கனிமொழியும் "இந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க, போராடிக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின்" என பச்சையாக பொய் சொல்லி பிரச்சாரம் செய்துள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்“ என்ற தலைப்பில் தி.மு.கவின் பிரச்சார கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தி.மு.க மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, "பா.ஜனதா கட்சியினர் சொல்லலாம் நாங்கள்தான் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று. அப்படி பாதுகாக்கக்கூடியவர்களாக இருந்தால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஏதாவது செய்திருக்கிறார்களா? ஒன்றும் இல்லை. அவர்கள் இந்துக்கள் இல்லையா? இருக்கக்கூடிய 2 சதவீதம் பேர்தான் இந்துக்களா?
அவர்களை பாதுகாத்தால் எல்லா இந்துக்களையும் பாதுகாத்ததாக ஆகிவிடுமா? பெரும்பான்மையான இந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க., கருணாநிதியை தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் தலைவர் ஸ்டாலின். அதனால்தான் பெரும்பான்மை இந்துக்களுக்காக தரவேண்டிய நியாயமான இட ஒதுக்கீட்டை கேட்டு போராடி வருகிறோம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "பெரும்பான்மையான இந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின்" என மீண்டும் ஒருமுறை அழுத்தி கூறினார்.
இந்துக்களுக்கு தி.மு.க எதிராகவும், இந்துக்களை புண்படுத்தும் விதமாகவும், ஒரு பண்டிகை என்றால் வாழ்த்து கூற கூட வக்கற்றும் இருந்த தி.மு.க தற்பொழுது 4 மாதங்களில் தேர்தல் வருகிறது என்ற உடனே இந்துக்கள் வாக்கு வேண்டி இப்படி நாடகம் போடுகிறது என மக்கள் பேச துவங்கிவிட்டனர்.