ரஜினியால் மிரண்டு போனவர்கள் தி.மு.க.தான்.. சி.பி.ராதாகிருஷ்ணன்.!
ரஜினியால் மிரண்டு போனவர்கள் தி.மு.க.தான்.. சி.பி.ராதாகிருஷ்ணன்.!

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் கேரள தேர்தல் பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷணன் பேசும்போது; நடிகர் ரஜினி தன்னுடைய உடல் நிலையை கருத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இதனை விமர்சிக்கும் உரிமை மற்றவர்கள் யாருக்கும் இல்லை என்று கூறினார்.
இது பற்றி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்: ரஜினியின் அறிவிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சியை தரும் என்பது திருமாவளவனின் கருத்து. உண்மையிலேயே மிக அதிர்ச்சியாக இருந்தவர்கள் திமுக கூட்டணியினர்தான். அதனால் அவர்களுக்கு சிறு திருப்தி இருந்திருக்கக் கூடும். ஆனால் எங்களை பொருத்தமட்டில் அவர் கட்சி ஆரம்பிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.
அதே நேரத்தில் தமிழகத்தில் சிலர் கூப்பாடு போடுவதைப்போல அவர் ஒரு மராட்டியர், அதனால் அவர் இங்கே ஆட்சிக்கு வரக்கூடாது. அவர் இங்கே கட்சி தொடங்கக் கூடாது என்ற கருத்தா நாங்கள் கூறியது கிடையாது. மேலும், அனைவரும் இந்தியர்கள் எல்லோரும் கட்சியை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு. அதுமட்டுமின்றி ரஜினியை பொருத்தவரை அவர் தமிழ்நாட்டின் ஒரு அங்கம். அதிலே எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. ஒரு நல்ல மனிதர் அதிலும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
அவர் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு அறிவிப்பை செய்திருப்பது அவருடைய சொந்த விருப்பம். இதை விமர்சிக்கின்ற உரிமை மற்றவர்களுக்கு இல்லையென்றே நான் கருதுகிறேன். ஆன்மிக அரசியல் என்பது, ஒரு சமுதாயத்திற்கு நல்லது.
ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை ஆதரித்தது, ஆன்மிக அரசியலுக்கு மிகப்பெரிய வலுவை சேர்த்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில் ரஜினி ஒரு இயக்கத்தை ஆரம்பிக்காத காரணத்தால் ஆன்மிக அரசியல் தோற்றுவிடும் என்று சொல்வதும் அல்லது தோற்றுப் போய்விடும் என்று எதிர்பார்ப்பதும் அறிவுடைமை அல்ல. இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.