பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகையில் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் உருவாக்கும் தி.மு.க அரசு ! - கிளம்பும் எதிப்புகள் !
By : Mohan Raj
டெல்டா'வில் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை தி.மு.க அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும். மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு கழகம் மேற்கொண்டுள்ளது. சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் பகுதி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லைக்குள் தான் வருகிறது. ஆனாலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட தொழில்கள் பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லாததால், இத்திட்டத்தைச் செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தி.மு.க அரசு அதிகாரிகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் உள்ள ஆர்வம் சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதுகாப்பதில் இல்லை" என கடுமையாக தி.மு.க அரசை சாடியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், "காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்து வருவது குறிப்பிடதக்கது.