திமுக நடத்திய ஒன்றிணைவோம் நிகழ்ச்சி.. ஜவுளி கடை, நகை கடையில் இவ்வளவு வசூலா.. கே.பி.ராமலிங்கம் என்ன சொல்கிறார்.!
திமுக நடத்திய ஒன்றிணைவோம் நிகழ்ச்சி.. ஜவுளி கடை, நகை கடையில் இவ்வளவு வசூலா.. கே.பி.ராமலிங்கம் என்ன சொல்கிறார்.!

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யான கே.பி. ராமலிங்கம் இன்று காலை பாஜகவில் இணைந்தார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இணைப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: “கே.பி.ராமலிங்கத்தின் வருகையால் கூடுதல் பலம் என்றும், கே.பி.ராமலிங்கத்தின் வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்தார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் கலைஞரின் மகனுமான மு.க. அழகிரியை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக திட்டமிட்டது.
அழகிரி வந்தால் வரவேற்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறினார்.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்தார் கே.பி. ராமலிங்கம். இதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
திமுகவில் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு இயக்கத்தைக் காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் இது இல்லை. மேலும், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் செய்த வசூல் விவரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளன.
ஸ்டாலின் தன் கட்சி நிதியில் இருந்து மக்களுக்குக் கொடுத்தாரா? சென்னை சில்க்ஸ், போத்தீஸ் என எந்தெந்த ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகளில் திமுக வசூல் நடத்தியது பற்றியெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் அதை வெளியிடும் நேரம் இதுவல்ல” என்று தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார் கே.பி. ராமலிங்கம்
இந்நிலையில், தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கும் கே.பி. ராமலிங்கத்தின் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடிக்கத் திட்டமிட்டிருக்கிறது பாஜக. அதாவது அழகிரியோடு நெருக்கமாக தொடர்புள்ள கே.பி.ராமலிங்கம் மூலம் அழகிரியை தனிக்கட்சி தொடங்க வலியுறுத்துவது. இன்னொரு பக்கம் ஒன்றிணைவோம் வா திட்டம் பற்றி கே.பி. ராமலிங்கம் கூறிய புகார்களை மேலும் கூர்மையாக்கி ஸ்டாலினை அட்டாக் செய்வது என்று பாஜக திட்டம் தீட்டியுள்ளது.