Kathir News
Begin typing your search above and press return to search.

பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் குறித்துப் பேசும் தகுதி கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளதா?

பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் குறித்துப் பேசும் தகுதி கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளதா?

பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் குறித்துப் பேசும் தகுதி கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளதா?

Saffron MomBy : Saffron Mom

  |  24 Nov 2020 8:34 AM GMT

இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் தங்களை பேச்சுரிமையின் நாயகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாசிச அரசாங்கம், தனியுரிமை, தனிமனித உரிமைகள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் கடந்த வாரத்தில் கேரளாவில் ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கம் 'விரும்பத்தகாத' கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை கொண்டுவர முயற்சித்தது.

ஆனால் இந்த திருத்தத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள், சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சியினரின் வலுவான எதிர்ப்பிற்குப் இந்த சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என்று திங்கட்கிழமை ஜகா வாங்கியது.

இந்த சட்டத்திற்கு கேரள ஆளுநர் வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டார். இந்த சட்டத்தில் அப்படி என்ன இருந்தது? இந்த சட்டத்தின்படி, எந்த ஊடக வாயிலாகவும் 'அவமானப்படுத்தும்' நோக்கத்திலோ, மிரட்டும் விதமாகவோ அவதூறான கருத்துக்களை எழுதினாலோ பேசினாலோ, கேரள மாநில அரசாங்கத்திற்கு யார் மீதும் வழக்கு போடவும், சிறையில் தள்ளவும் அதிகாரம் இருக்கிறது.

உச்சபட்ச கொடுமையாக இதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். இந்த மசோதா, கேரள போலீஸ் சட்டம் 118 (A) வின் கீழ் ஒரு பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களின் வாயிலாக செய்யப்படும் குற்றங்களை தடுப்பதற்கு இத்தகைய பிரிவு தேவை என்று இடதுசாரி அரசாங்கம் இதை நியாயப்படுத்தியது.

ஆனால் பேச்சுரிமை ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த விவாதத்தில் பெரிய ஓட்டை இருப்பதை சுட்டிக் காட்டின. இது முக்கியமாக அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் பதிரிகையாளர்களைத் தாக்க பயன்படும் என்பதை சுட்டிக்காட்டினார்.

ஏன் 118 (A) ஒரு மோசமான யோசனை?

இந்த சட்டத்திற்கு ஆதரவாக, நியாயப்படுத்தி பேசிய கேரள முதல்வர் பினராய் விஜயன், கேரள அரசாங்கத்திற்கு பத்திரிக்கை சுதந்திரத்தையும், தனிமனித உரிமையையும் பாதுகாக்கும் உரிமை இருப்பதாகவும், ஆனால் தனிமனித மரியாதைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் விஷயங்களை தடுக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தான் கேரள போலீஸ் சட்டம் கொண்டு வரப் போவதாகவும் கூறினார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் பலரின் மேல் தவறாக அவதூறு பரப்பபடுவதாகவும் திருநங்கைகள் மற்றும் பெண்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாவதாகவும் கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகளும் சிவில் உரிமை சமூகங்களும் இந்த காரணத்தை வலுவாக கண்டித்தனர்.

இதன் விளைவாக மாநில அரசாங்கம் ஒரு வழியாக இந்த சட்டத்தை அமல் படுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளனர். சொல்லப்போனால் இப்படி தனி மனிதர்களையும், பத்திரிகையாளர்களையும் தொந்தரவு செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்படுவது பேச்சுரிமை மீதான மிகப் பெரிய தாக்குதல் ஆகும்.

சமூக ஊடகங்களின் வாயிலாக அவதூறைத் தடுப்பதற்காக கொண்டு வரப்படும் சட்டம் என்று கூறப்படும் இந்த 118 (A), அரசாங்கத்தை விமர்சிக்கும் அல்லது எதிர்த்துப் பேசும் குரல்களை நெறிக்க அதிகாரிகளால் எளிதாக பயன்படுத்தப்படலாம். மிரட்டல், அவமானம் என்பதெல்லாம் விஷயங்களைப் பொறுத்து வெகுவாக வேறுபடும்.

அது சட்டத்தில் தெளிவாக கூறப்படாத காரணத்தினால் காவல்துறையினரின் விளக்கத்துடன் நீதித்துறையும் ஒத்துப்போகும் என்ற அச்சமும் இருந்தது. இதற்கு முன்பாக கேரளா போலீஸ் சட்டத்தில் 118 (D) இருந்ததை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. அந்த சட்டத்தின் கீழ்தான் குமரன் போன்ற சமூக ஆர்வலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் பிரிவு 118(A), பல வழிகளில் 118 (D) யை விட கொடுமையானது. இந்த அரசாங்கத்தின் நோக்கம் உண்மையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களை பாதுகாப்பதற்காக இருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை தர, தற்போது உள்ள சட்ட விதிகள் போதுமானவை.

118 (A)விற்கு ஒரு ஜனநாயக சமுதாயத்தில் இடமில்லை. ஒருவழியாக எதிர்ப்புகளின் காரணமாக கேரள அரசு பின் வாங்கி விட்டதாக தெரிகிறது. இந்த மாதிரி சட்டங்களை வைத்துக்கொண்டு, வைக்க விருப்பப்பட்டு கொண்டு நாட்டின் மற்ற மூலைகளில் நடக்கும் பேச்சு சுதந்திரம், தனி மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் தகுதி கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளதா என்பதே கேள்வி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News