ஸ்டாலின் கருத்தை ஏற்காத கே.எஸ்.அழகிரி - தி.மு.க, காங்கிரஸ் இடையிலான மோதல் முற்றுகிறதா?
ஸ்டாலின் கருத்தை ஏற்காத கே.எஸ்.அழகிரி - தி.மு.க, காங்கிரஸ் இடையிலான மோதல் முற்றுகிறதா?

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவர் விடுதலை குறித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே நாளுக்கு நாள் கருத்து மோதல்கள் முற்றி வருகின்றன.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுதலை தொடர்பான முடிவின் அறிவிப்பை ஆளுநர் வெளியிட வேண்டும் என்று இந்த விவகாரத்தை மத்திய அரசின் மீது திணிக்கும் நோக்குடன் கூறி வரும் வேளையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏழுவர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும், ஆளுநர் அல்ல என்று ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஒரு கேள்விக்கு அவர் இன்று பதிலளிக்கையில், "அ.தி.மு.க - பா.ஜ.க'வைப் போல, தி.மு.க - காங்கிரஸ் அடிமை கூட்டணி அல்ல, சுதந்திர கூட்டணி என்றும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துகளை சொல்கிறோம்” என்று சமாளித்து கூறியுள்ளார்.
இதிலிருந்து ஏழுவர் விடுதலையை மத்திய அரசின் மீது சுமத்தி அரசியலாக்க ஸ்டாலின் முயல்வதும், ஏழுவர் விடுதலையை காங்கிரஸ் சுத்தமாக விரும்பவில்லை எனவும் தெரிகிறது. சட்டமன்ற தேர்தல் வரும் வேளையில் தி.மு.க 200 தொகுதிகளில் தனித்து போட்டியிட விரும்புவதாகவும் ஆனால் அதிக தொகுதிகள் கேட்க காங்கிரஸ் விருப்பபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையிலான விரிசல் அதிகமாகி கொண்டே வருவது இந்த கூட்டணி வரும் தேர்தல் வரையில் தாக்குபிடிக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.