Kathir News
Begin typing your search above and press return to search.

நெல் கொள்முதலை துரிதப்படுத்துங்க! தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த மாநில அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

நெல் கொள்முதலை துரிதப்படுத்துங்க! தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 Sept 2021 4:45 PM IST

தமிழகத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த மாநில அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே எனது அறிக்கையில் தமிழ்நாட்டில், குறிப்பாக இந்த சீசனில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப் பாசனம் மூலம் நெல் பயிறிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன என்றும், மேலும் நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடையுள்ள 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக, பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகிறார்கள் என்றும், எனவே, அரசு உடனே தலையிட்டு வேளாண் பெருமக்கள் விற்பனைக்குக் கொண்டுவரும் நெல்மணிகள் அனைத்தையும் உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கோரியிருந்தேன். ஊடகங்கள் வாயிலாக பேட்டிகளும் அளித்திருந்தேன்.


மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்வது தாமதம் ஆவதால், வேளாண் பெருமக்கள் கொண்டு வரும் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன என்றும், இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவதால், அது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றினையும் சட்டமன்றத்தில் கொண்டுவர முயன்றேன்.

ஆனால் அது எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது குறித்து நான் சட்டமன்றத்தில் பேசியபோது, அதற்கு பதில்அளித்த உணவுத்துறை அமைச்சர் ஒரு சில புள்ளி விவரங்களைக் கூறி, விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் நெல் மூட்டைகள் அனைத்தையும், கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.


மேலும், அவர் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்றும் பதில் அளித்தார். அப்போது, நான் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழுடன் தங்கள் நிலத்திற்கான பட்டா மற்றும் அடங்கல் உடன் நெல் மூட்டைகளைக் கொண்டுவரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்மென்று அமைச்சருக்கு கோரினேன். அவரும் அதிகாரிகளுக்கு அவ்வாறே உத்தரவு வழங்கப்படும் என்று கூறினார்.

ஆனால், இன்னும் பல நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை என்றும், டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாக்கு இல்லை, எனவே நீங்களே சாக்கு வாங்கி வாருங்கள் என்று விவசாயிகளிடம் கூறுதல், தார்ப்பாய் இல்லை, நெல் வைப்பதற்கு இடம் இல்லை என்று கொள்முதல் நிலைய அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாகவும், இதனால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளாகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

மேலும், திட்டக்குடி தாலுக்காவில் தர்ம குடிகாடு கொட்டாரம், போத்திர மங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊர்களில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது இயங்கவில்லை என்றும், இதேபோல் கடலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. இதனால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை விவசாயிகளின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்கவும், அதற்குத் தேவையான சாக்குப் பை, தார்ப்பாய் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் வேளாண் பெருமக்களின் உழைப்புக்குத் தக்க பலன் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்றும் இந்த திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Edapadi Palanisamy Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News