தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் சட்டபேரவை தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் சட்டபேரவை தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
By : Muruganandham M
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு தேர்தல் ஆணைய தரப்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம். தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி உமேஷ் சின்ஹா ஜனவரி மாதம் முதல் தமிழக தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்கிற நிலை பின்பற்றப்படும். சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன. புதுச்சேரியில் 1559 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5 வாகனங்களுக்கு அதிகமாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதலாக மத்திய படைகள் நிறுத்தப்படும். மேற்கு வங்கத்திற்கு மட்டும் அல்ல தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கும் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
மத்திய படைகளின் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தப்படும்.
பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழக சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு தலா ஒரு செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன் மற்றும் பாலகிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகள் அனைத்தும் தரை தளத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பாக செய்தித்தாள்கள், ஊடகங்களில் கட்சிகள் விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்துவது கட்டாயம்
ஒரு தொகுதிக்கு ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே ஒரு வேட்பாளர் தேர்தல் செலவு செய்ய வேண்டும். சி விஜில் ஆப் மூலம் மக்கள் ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து உடனுக்குடன் புகார் அளிக்கலாம்.