கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த காடுகளை அதிகரிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அறிக்கை.!
கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த காடுகளை அதிகரிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அறிக்கை.!
By : Kathir Webdesk
கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த கடலோர காடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கை நமக்கு அளித்த கொடையான அலையாத்திக் காடுகளின் (மாங்குரோவ் காடுகள்) பரப்பளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கடலோரப் பகுதிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் வனத்துறை சார்பில் செயற்கைக் கோள் மூலம் தமிழக வனப்பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 4 சதுர கி.மீ அளவுக்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் அலையாத்திக் காடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. முத்துப்பேட்டை கடற்பகுதியில் மட்டும் 11,886 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் இருந்தன. ஆனால், இப்போது அவற்றில் 60% காடுகள் அழிந்து விட்டன. இன்றைய நிலையில் சுமார் 4800 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்திக் காடுகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் கூட 2000 ஹெக்டேர் (16.8%) காடுகள் மட்டுமே அடர்த்தியாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2018-ஆம் ஆண்டில் காவிரிப் பாசன மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலால் தான் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு குறைந்திருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் பிச்சாவரத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டையிலும் தான் அலையாத்திக் காடுகள் அதிகமாக உள்ளன. பிச்சாவரம் காடுகளுடன் ஒப்பிடும் போது முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்தவை.
2004ஆம் ஆண்டில் சுனாமி தாக்கிய போது முத்துப்பேட்டை பகுதியில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படாததற்கு அலையாத்திக் காடுகள் தான் காரணம் ஆகும். அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காடுகள் என்பதால் தான் அலையாத்திக் காடுகள் என்று இவை அழைக்கப்படுகின்றன. முத்துப்பேட்டை பகுதியை ஒட்டிய 22-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவை தான் பாதுகாப்பாக உள்ளன. இந்தக் காடுகள் சீரமைக்கப்படாவிட்டால் இப்பகுதிகள் கடல் சீற்றத்திற்கு ஆளாகக் கூடும்.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகள் கஜா புயலால் அழிந்தன என்றால் சிதம்பரம் பகுதியில் உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகளின் அடர்த்தியும் போதிய பராமரிப்பின்மையாலும், சிலரின் சுயநலத்தாலும் குறைந்து வருகின்றன. சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பகுதியிலும் அதிக அளவில் இக்காடுகள் உள்ளன. ஆனால், இவற்றால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்ற எண்ணத்தில் அலையாத்திக் காடுகளை பொறுப்பற்ற மனிதர்கள் அழித்து வருகின்றனர். இயற்கை சீற்றங்களும், இயற்கையை மதிக்காத மனிதர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு மேற்கொள்ளும் தாக்குதல்களால் அலையாத்திக் காடுகள் அழிந்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது ஆகும். தமிழ்நாட்டின் கடற்பகுதி 1076 கி.மீ நீளம் கொண்டதாகும். இந்தியாவின் இரண்டாவது நீளமான கடல் எல்லையைக் கொண்டது தமிழ்நாடு ஆகும்.
தமிழகத்தின் கடலையொட்டிய பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் அலையாத்திக் காடுகள் உள்ளன. இவை இயற்கை தமிழ்நாட்டுக்கு அளித்த கொடையாகும். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் கடல் சீற்றத்தை தடுப்பது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் பிச்சாவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகளுக்கு ஆண்டு தோறும் வருகை தருகின்றன. எனவே, அலையாத்திக் காடுகளை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 1995 - 2015 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 2,600 ஹெக்டேர் பரப்பளவு அதிகரித்துள்ளன.
அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 1971 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகளில் 6.76 சதுர கிலோமீட்டரில் இருந்து 14 மடங்கு அதிகரித்து 100 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. எனவே, திட்டமிட்டு செயல்பட்டால் தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்கச் செய்வது சாத்தியமான ஒன்று தான்.
கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழக கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அலையாத்திக் காடுகளை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்துவது மட்டுமின்றி, அவற்றை ஒருங்கிணைத்து இயற்கை சுற்றுலா வளையமாக அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.