தி.மு.க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? - சந்தேகம் கிளப்பும் ஜி.கே.வாசன் !
By : Mohan Raj
"தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்ற முடியுமா?" என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இன்று ஆத்தூர் வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்ற முடியுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவேண்டும். சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். அதுவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையாகும். கோரிக்கையை ஏற்று அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது, "தமிழகத்தில் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளது. அந்த ரெயில்வே திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. தொடரும். ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.