வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை!
By : Thangavelu
போக்குவரத்துதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட சிலருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் திடீரென்று தடை விதித்துள்ளது.
கடந்த 2011 முதல் 15ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. இவர் அத்துறையில் பலருக்கு பணி வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இவர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க தொடங்கியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இதன் விசாரணைக்காக செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் 3 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் பின்னர் உச்சநீதிமன்றம் சென்றபோது, குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் 9ம் தேதியும், செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் 12ம் தேதியும், அமைச்சர் செந்தில் பாலாஜி 13ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் தாக்கல் செய்த மனுவில், வழக்கில் குறியீடு செய்யப்பட்டதா ஆவணங்களை அமலாக்க பிரிவுக்கு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், எந்த வழக்கிற்கான விசாரணை நடைபெறுகிறது என்கின்ற விளக்கத்தை கேட்டும், விசாரணை தொடர்பான ஆவணங்களை வழங்ககோரியும், அமலாக்க பிரிவுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதுவரையில் பதில் வரவில்லை. எனவே அமலாக்கப்பிரிவின் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: Daily Thanthi