மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்.!
மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்.!
By : Kathir Webdesk
தமிழகத்தின் 6 முறை முதலமைச்சராக இருந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் இரும்பு பெண்மணியாக வலம் வந்தவர். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக காலமானார்.
இவர் கடந்த 1982ம் ஆண்டு அரசியலில் காலடி வைத்தார். இதன் பின்னர் 1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., நியமனம் செய்தார். இதனைதொடர்ந்து கட்சிக்காக உழைத்து கொண்டிருந்தபோது, 1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக எம்.ஜி.ஆர்., நியமனம் செய்தார்.
இதன் பின்னர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 1989ம் ஆண்டு, போடிநாயக்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1991ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வானார். அரசியல் களம் மட்டுமின்றி திரைப்படங்களிலும் கோலோச்சிய அவர் சுமார் 115 படங்களில் நடித்துள்ளார். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழங்கிய வந்த பெண் சிங்கம் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி தனது மூச்சை நிறுத்தி கொண்டது.
ஜெயலலிதாவின் மறைவு அவரது தொண்டர்களுக்கு நீங்கா வடுவாகவே இன்றுவரை மாறியுள்ளது. அந்த வகையில் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மௌவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.