"அவரை மாதிரி என்னாலும் பேச முடியும், ஆனால் பேச மாட்டேன்".. முதல்வர் பழனிச்சாமி பேச்சிற்கு ஜகா வாங்கிய ஸ்டாலின்.!
"அவரை மாதிரி என்னாலும் பேச முடியும், ஆனால் பேச மாட்டேன்".. முதல்வர் பழனிச்சாமி பேச்சிற்கு ஜகா வாங்கிய ஸ்டாலின்.!
By : Mohan Raj
"அவரைப்போன்று என்னாலும் பேசமுடியும். அவரைப்போல இங்கு இருக்கும் நம் கழகத் தோழர்களை அழைத்துப் பேசச் சொன்னால் பல மடங்கு பேசுவார்கள். ஆனால் நாங்கள் நிச்சயமாகப் பேச மாட்டோம்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு பதில் தரும் விதமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
திருத்தணி தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க'வின் பிரச்சார கூட்டமான மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, "முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் - அவரை எடப்பாடி என்று சொல்வதில்லை. ஏன் என்றால், எடப்பாடி என்று ஒரு ஊர் இருக்கிறது. நான் அண்மையில் அந்த எடப்பாடிக்குச் சென்றிருந்தேன். அங்கு இதேபோல மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினேன். அப்போது அங்கிருந்த சில தாய்மார்கள் என்னிடத்தில், “ஐயா, பழனிச்சாமி என்று சொல்லுங்கள். எடப்பாடி என்று சொல்லாதீர்கள். எடப்பாடி என்று சொல்வது எங்களுக்குக் கேவலமாக இருக்கிறது“ என்று சொன்னார்கள். அதிலிருந்து, எடப்பாடி என்று சொல்வது இல்லை. பழனிசாமி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அந்த முதலமைச்சர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் செல்லும் பழனிசாமி, தான் ஒரு முதலமைச்சர் என்பதையே மறந்து, மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, ‘நீ, வா, போ, உனக்கு என்ன தெரியும், உனக்கு என்ன புரியும், யார் நீ, என்ன சொல்கிறாய்’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் ஒரு முதலமைச்சராக இருந்து வருகிறார்.
பழனிசாமியைப் பொறுத்தவரை, தரம் இல்லாமல் இருக்கலாம். தரங்கெட்டுப்போனவராக இருக்கலாம். அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவி ஒரு தரம் மிக்க பதவி. அதை மறந்து விடக் கூடாது. அந்தத் தரம் மிக்க பதவியை வைத்துக் கொண்டு, அவர் இவ்வாறு ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, விமர்சனம் செய்வது என்பது அவருடைய பதவிக்கு அழகல்ல. அவரைப்போன்று என்னாலும் பேசமுடியும். அவரைப்போல இங்கு இருக்கும் நம் கழகத் தோழர்களை அழைத்துப் பேசச் சொன்னால் பல மடங்கு பேசுவார்கள். ஆனால் நாங்கள் நிச்சயமாகப் பேச மாட்டோம்" என முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்ன தெரியாமல் பேசினார்.