டார்ச்லைட் எனக்கு கிடைக்கலயே.. புலம்பித்தள்ளும் கமல்.!
டார்ச்லைட் எனக்கு கிடைக்கலயே.. புலம்பித்தள்ளும் கமல்.!
By : Kathir Webdesk
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி என்று கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி தொடங்கினார். இதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அந்த தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவில் வாக்கு வாங்கவில்லை. மேலும், கமல் போட்டியிடவே இல்லை.
அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச்லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த சின்னத்தை கமல் மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். அரசியல் தொடர்பான அனைத்து போஸ்டர்களிலும் கமல்ஹாசன் ‘டார்ச்லைட்’ சின்னத்தை உயர்த்தி பிடித்தபடி காட்சி அளிக்கும் புகைப்படங்களும் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து சட்டமன்ற தேர்தலிலும் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகளுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு அவர்கள் வைத்திருந்த சின்னமே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சின்னம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் டார்ச்லைட் சின்னம் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கமலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படாததால் விரக்தியில் உள்ளனர்.