"சம்பளத்தை குடுங்க இம்ரான்கான் அவர்களே!" - கதறும் அரசு அதிகாரிகள் !
By : Mohan Raj
"இது தான் உங்கள் புதிய பாகிஸ்தானா?" என பாகிஸ்தான் தூதரக அதிகாரி அரசு சம்பளம் தராத காரணத்தினால் இம்ரான் கானை மீது கேள்வி எழுப்பிய ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பும் அதனை தொடர்ந்த ஊரடங்கும் ஏற்படுத்திய தாக்கத்தால் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பண வீக்கம், உலக நாடுகளிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை என பாகிஸ்தான் அரசு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, செர்பியாவிலிருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "முன் எப்போதும் காணாத பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு, தாங்கள் எப்போது எங்களின் மூன்று மாத சம்பளப் பாக்கியைத் தரப் போகிறீர்கள். ஸ்கூல் ஃபீஸ் கட்டாததால் எங்கள் குழந்தைகள் பள்ளியைவிட்டே வெளியேற்றப்பட்டுவிட்டனர். இது தான் உங்கள் புதிய பாகிஸ்தானா?" தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை குறிப்பிட்டு, மிகவும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த ட்விட் பல தரப்பில் இருந்தும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் பின் நீக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு சம்பளம் கூட தர இயலாத நிலையில் பாக்கிஸ்தான் அரசு திண்டாடி வருவதை உறுதிபடுத்துவது போன்று இந்த ட்விட் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.