4வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை: கலக்கத்தில் செந்தில் பாலாஜி!
தமிழகத்தில் விற்கப்படும் டாஸ்மாக் பாட்டில்கள் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும், கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் வரத்தொடங்கியது.
By : Thangavelu
தமிழகத்தில் விற்கப்படும் டாஸ்மாக் பாட்டில்கள் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும், கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் வரத்தொடங்கியது.
அது மட்டுமின்றி டாஸ்மாக் நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி அளவிற்கு முறைகேடு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அத்துறையை கவனித்து வரும் செந்தில்பாலாஜியை வருமான வரித்துறை கண்காணித்து வந்தது. இதனால் கடந்த 26ம் தேதி கரூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது.
தற்போது கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அரவிந்த் மற்றும் அவருடைய மனைவி காயத்திரி என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் மறுவாழ்வு மையம் மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்கள் செய்வதாக கூறப்படுகிறது.
அதே போன்று கரூர் காந்திகிராமத்தில், பிரேம் குமார் என்பவர் வீடு, ஈரோடு திண்டல் சக்தி நகரில் டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் சோதனை தொடர்கிறது.
மேலும் பொள்ளாச்சி அருகே பனப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்தின் எம்.சாண்ட் நிறுவனத்திலும் சோதனை நடைபெறுகிறது. எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் பல கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.