ஜெயலலிதா வீட்டிற்குள் அனுமதி மறுப்பு! தமிழக அரசு மேல்முறையீடு!
ஜெயலலிதா வீட்டிற்குள் அனுமதி மறுப்பு! தமிழக அரசு மேல்முறையீடு!
By : Kathir Webdesk
சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்குள் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நேரத்தில், ஜன.,28ம் தேதி வேதா இல்லம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், வேதா இல்லம் திறக்கப்படுவதையொட்டி அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென தீபா மற்றும் தீபக் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, நேற்று இடைக்கால தீர்ப்பில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். வளாகத்தை மட்டுமே திறக்க வேண்டும். வீட்டிற்குள் செல்ல பொதுமக்கள் அனுமதி அளிக்கப்படாது என உத்தரவு பிறப்பித்தார்.
இன்று வேதா இல்லம் திறக்கப்படுவதற்கு தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்த்தி அளிப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக, தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.