நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியே கிடையாது என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிரடியாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தானும் சளைத்தவன் அல்ல என்று கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
செல்லும் இடங்களில் எம்.ஜி.ஆரை., துணைக்கு அழைத்து செல்லும் கமல் நான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன், அப்பா என்றும் தனது ஆசான் எனவும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவரும் உரிமை உண்டு என்று கூறி வந்தார் கமல்.
இது ஒரு புறமிருக்க தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர்., என்ற பெயருக்கு இன்னும் மவுசு உள்ளது என்பதை தெரிந்து கொண்ட கமல் எம்.ஜி.ஆரை வைத்து காய் நகர்த்த பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை. ஓய்வு நேரத்தில் பொழுது போகாமல், அரசியலுக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆரை., பிறர் ரசிக்கலாம் ஆனால் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றார்.