Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்சி மாறினாலும் திருட்டு தொடர்கிறதே ! கமல் பரபரப்பான அறிக்கை!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆட்சி மாறினாலும் திருட்டு தொடர்கிறதே ! கமல் பரபரப்பான அறிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  10 Sep 2021 5:11 AM GMT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சரியம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில். நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.


மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு.

இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப்போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?

கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்து வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.

அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா?

அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா?

அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா?

ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா?

சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா?

இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Kamalhassan Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News