கோவை: 'வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை': பா.ஜ.க. குற்றச்சாட்டு.!
கல்லூரி வளாகத்தில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி பாஜகவினர் ஜி.சி.டி வளாகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கண்காணித்து வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் முறைகேடு நடந்து விடுமா என்று எண்ணி, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் வாக்கு எண்ணும் மையங்களில் முகாமிட்டுள்ளது.
அந்த வகையில் கோவையில் ஜிசிடி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி பாஜகவினர் ஜி.சி.டி வளாகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசும்போது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே முறையாக செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டினர். இப்பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.