அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமை விடுத்த முக்கிய அறிவிப்பு.!
அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமை விடுத்த முக்கிய அறிவிப்பு.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் பல மாறுதல்களை அக்கட்சி செய்துள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. உட்பட கட்சிகள் தீவிரம் காட்டி உள்ளன.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. எனவே அ.தி.மு.க. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதிய மாவட்ட செயலாளர்களும், மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 20ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு, கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றார். தற்போது இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.