லியோனியால் பெண்களுக்கு மட்டும் அவமானம் இல்லை.. தமிழ்நாடு பாடநூலுக்கும்.. ராமதாஸ் கொந்தளிப்பு.!
திமுக ஆட்சி அமைந்த பின்னர் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களை இழிவாகப் பேசிய லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பதவி கொடுப்பது மிகப்பெரிய அவமானம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கொந்தளித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களின் இடுப்பு குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார்.
இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது திமுக ஆட்சி அமைந்த பின்னர் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது. பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியில் இருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.