மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட அமைச்சர் காமராஜ்.!
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட அமைச்சர் காமராஜ்.!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
தமிழக உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் காமராஜ், இவருக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே உடல்நிலையில் சற்று தேறிய நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு நுரையீரலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமானதால், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தகவல் வெளியிட்டு வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று அமைச்சர் காமராஜிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவருடைய காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் குணமடைந்ததால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.