"சிறுபான்மையினரின் காவலன் என சொல்லி ஊரை ஏமாத்தாதீங்க" - ஸ்டாலினை விமர்சித்த டி.டி.வி !
By : Mohan Raj
"சிறுபான்மையினரின் காவலன் என்று சொல்லிக்கொண்டே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலையாக முடியாதபடி அரசாணை பிறப்பித்திருப்பது தி.மு.க'வின் ஏமாற்று வேலை" என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி என குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனும் தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடரந்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டின் உரிமைகளை தங்கள் சுயலாபத்துக்காக காவு கொடுப்பதையும், மக்கள் விரோத செயல்களையும் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த போதெல்லாம் வழக்கமாக செய்து வந்த தீய சக்தியான தி.மு.க., தற்போதும் முல்லைப் பெரியாறு, நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகளில் போடும் இரட்டை வேடத்தையும், சிறுபான்மையினரின் காவலன் என்று சொல்லிக்கொண்டே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலையாக முடியாதபடி அரசாணை பிறப்பித்திருப்பதையும், எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்த்த பல திட்டங்களை ஆளுங்கட்சியான பிறகு செயல்படுத்த துடிப்பதுமான தி.மு.க'வின் ஏமாற்று வித்தைகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம். தமிழகத்திற்கான நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மாண்புமிகு அம்மா அவர்களை இதயத்தில் தாங்கிய ஜனநாயக போர் வீரர்களாக செயல்படுவோம் என இந்நாளில் உறுதி ஏற்கிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க'வை சேர்ந்த பல தலைவர்கள் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.