"வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்" அழகிரியின் சூசக அறிவிப்பு - பயத்தில் தி.மு.க.!
"வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்" அழகிரியின் சூசக அறிவிப்பு - பயத்தில் தி.மு.க.!

கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய தி.மு.க தலைவரின் அண்ணனுமாகிய மு.க.அழகிரி சமீப காலமாக தி.மு.க'வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட காரணத்தால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். மிகச்சமீபமாக அழகிரி பா.ஜ.க'வில் அமித்ஷா முன்னிலையில் இணைவார் என்ற யூகங்களும் நிலவி வந்தன.
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் தன்னை ஒதுக்கி வைத்த ஸ்டாலினுக்கு பதிலடி தரும் விதத்தில் அழகிரி கண்டிப்பாக தனது அரசியல் அறிவிப்பை அறிவிப்பார் என்ற கோணத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் இன்று "வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு கண்டிப்பாக இருக்கும்" என அதிரடியாக அறிவித்துள்ளார் அழகிரி.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பா.ஜ.க'வில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப் போகத் தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்”என்று தெரிவித்தார்.
இதனால் தி.மு.க'வில் இணையாமல் தனியாக கட்சி துவங்குவதா அல்லது வேறு பாதையில் அரசியலில் தி.மு.க'விற்கு எதிராக பயணிப்பதா என்ற முடிவை அழகிரி எடுத்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே அழகிரி பயத்தில் உள்ள தி.மு.க'விற்கு இன்றைய அழகிரியின் செய்தியாளர்கள் சந்திப்பு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் நிறைய சீனியர்கள் அதிருப்தியாளர்களாக வலம் வரும் சூழலில் அழகிரியின் இந்த முடிவை தி.மு.க சற்றே பயத்துடன் எதிர்பார்க்கிறது.